|
நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் கருப்பன் பின்னணியில், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் உள்ளனர் என, பிடதி நித்யானந்தா தியான பீடத்தைச் சேர்ந்த நித்ய சச்சிதானந்தா தெரிவித்தார்.
வீடியோ குறித்து விளக்கமளித்த நித்யானந்தாவின் சீடரான நித்ய சச்சிதானந்தா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடந்த 2ம் தேதி இரவு, நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளில் எவ்வித உண்மையும் இல்லை. கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம். நித்யானந்தாவுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.
வீடியோ காட்சியை எடுத்துக் கொடுத்ததாக லெனின் கருப்பன், தமிழக போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்த லெனின் கருப்பனுக்கு தொழில் நுட்பங்கள் தெரியாது. அவருக்கு பின்னணியில், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருந்து இயக்கி உள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த மெல்வியா டயமண்ட், ஆசிரமத்தில் கொலை செய்யப்பட்டதாக லெனின் கருப்பன் புகார் கூறியுள்ளார். கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததால் தான், மெல்வியா இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. நித்ய பிரபானந்தா என்ற சுரேந்தரை, ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்திருப்பதாக, அவரது பெற்றோர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால், தன் விருப்பப்படி ஆசிரமத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ள நித்யானந்தா, இன்னும் மூன்று நாட்களில் பிடதிக்கு வந்ததும், அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவார். இவ்விவகாரத்தில் கர்நாடக அரசும், பொலிஸாரும், பொது மக்களும், பக்தர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆசிரமத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு சச்சிதானந்தா கூறினார்.
நித்தியானந்தவின் பண பரிவர்த்தனை; முதற் கட்ட விசாரணை ஆரம்பம்.
சாமியார் நித்யானந்தாவின் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறோம், என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நித்யானந்தாவிற்கு எதிராக பெண்கள் யாரும் கற்பழிப்பு புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா மீது புகார் கொடுத்த லெனின் போலீஸ் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்தார்.
காந்தப்படுக்கை வழக்கில் லெனினுக்கு தொடர்பு இருக்கிறதா என தெரியவில்லை. நித்யானந்தா தமிழகத்தில் எப்போதெல்லாம் வந்துள்ளார், எங்கு தங்கினார், அவரது பண பரிவர்த்தனை ஆகியவை குறித்து முதற்கட்ட விசாரணையில் விசாரித்து வருகிறோம்.
கொலை மிரட்டல் வழக்கை சேலம் பொலிஸ் விசாரிக்கின்றனர். நித்யானந்தா மீது லெனின் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக பொலிஸ்க்கு மாற்ற டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளேன்.வழக்கு விசாரணை தொடர்பாக, கர்நாடகா மற்றும் சேலம் பொலிசாருக்கு சென்னை பொலிசார் தேவையான உதவிகளை செய்வர். நித்யானந்தாவுக்கு எதிரான மோசடி வழக்கை சென்னை பொலிசார் விசாரிப்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.
Source:Veerakesari
|